ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

ஒரு  வீட்டில் வெள்ளாடுகள் பல  வளர்த்து வந்தன.அவைகளோடு ஒரு செம்மறி ஆடும் இருந்தது. செம்மறி ஆடு கொழு கொழுவென்று அழகாக இருந்தது. அதனால் அதன் மீது அந்த ஊர் மக்களுக்கு பிரியம் அதிகம்.

இதைப்பார்த்த  மற்ற வெள்ளாடுகள் அதன் மீது பொறாமை கொண்டன. இதனால்  செம்மறி ஆட்டை, வெள்ளாடுகள் ஒதுக்கியே வைத்திருந்தன. அதுமட்டுமின்றி ஆடுகளுக்கு தண்ணீர் குடிக்க வைத்தால் உடனே பொறாமைப்பிடித்த  வெள்ளாடுகள், செம்மறி ஆட்டை தண்ணீர் குடிக்க விடாமல் செய்ய முண்டியடித்துக்
கொண்டு ஓடும்.

ஒரு நாள் அந்த வெள்ளாடுகள் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த கஞ்சியை குடிக்க வழக்கப்படியிலான தந்திரத்தோடு முட்டி மோதி ஓடின.செம்மறி ஆட்டையும் முட்டித்தள்ளியப்படி ஓடியதில் கஞ்சித்தொட்டி உடைந்து கஞ்சியெல்லாம் கீழே கொட்டி விட்டன.இதனால் ஆடுகளுக்குள் காயம் ஏற்பட்டதோடு அன்றைக்கு இரவு அத்தனை ஆடுகளும் உணவின்றி பட்டினியாகவே தூங்கின. மறுநாளும் செம்மறி ஆட்டை பழி வாங்க எண்ணிய வெள்ளாடுகள் பழைய பார்முலாவை கையாண்டதால் மறுபடியும் கஞ்சித்தொட்டி உடைந்து அன்றும் பட்டனி. இப்படியே பல நாட்கள் கழிந்தன.

சிந்திய சோற்றுப் பருக்கைகளை சாப்பிட சாரை சாரையாய் ஊர்ந்து வந்த எறும்புகள், ஆடுகளின் பொறாமைபுத்தியை பார்த்து,எங்களுக்கு இப்படி ஒரு புத்தியை தராத கடவுளே, உமக்கு நன்றி என்று கூறியபடி சோற்றுப்பருக்கைகளை சாப்பிட்டு மீதியை அள்ளிக்கொண்டு வரிசையாக சென்றுவிடும். ஒரு நாள்,அந்த எறும்புக்கூட்டம், ஒவ்வொரு ஆடும் பட்டினியால் அழுவதைப்பார்த்து “ஹ்ஹ ஹா” என்று சிரித்தன.


உடனே கோபப்பட்ட வெள்ளாடுகள் “ஏய் எறும்புகளா? எங்கள் நகத்தின் அளவுகூட இல்லாத நீங்கள் எங்களைப் பார்த்து சிரிப்பதா?” என்று  கேட்டன.

“நீங்கள் பெரியவர்களாக இருந்து என்ன பிரயோஜனம்? இருக்கும்  உணவை  கூட  உங்களுக்குள் பகிர்ந்து சாப்பிடத் தெரியாத மூடர்களாய், பிறர் கேலி பேச  பட்டினியாய்,  இருக்கிறீர்களே. ஒரே கூட்டில் வாழும்போது கூட அடித்துக்கொள்கிறீர்களே? இதுதான் பெரியவர் குணமா? நீங்களும் எங்களை மாதிரி ஒற்றுமையாக இருந்திருந்தால் இப்படி முட்டி மோதி, கிடைத்த உணவை தினம்  வீணாக்கி  கொண்டு இருப்பீர்களா? உங்களால் இந்த ஊருக்கும், உங்களது மேய்ப்பனுக்கும் தானே கெட்ட பெயர்? என்று  கோரசாக நிறைய கேள்விகள்  கேட்டன எறும்புக்கூட்டம்.

பட்டினி விளையாட்டின் ஆபத்தை அப்போதுதான் ஆடுகள் உணர்ந்தன.

“ உருவத்தில் சிறியவர்களான நீங்கள் ஒற்றுமையாக இருந்து  எங்கள் அறிவுக் கண்களை திறந்துவிட்டீர்கள். நாங்களும் இனி ஒற்றுமையாக இருப்போம்” என்று ஒன்றாக கூறின ஆடுகள்.

பின்னர் ஆடுகளை சேர்த்து வைத்த மகிழ்வோடு எறும்புக்கூட்டம்  சோற்றுப் பருக்கைகளுடன் புறப்பட்டன.

சிந்திப்போம்..... செயல் படுவோம்!

Comments