பூனைக்கு இடம் கொடுத்த கழுகு - பஞ்ச தந்திரக் கதைகள்!
கங்கை நதி அருகே உள்ள மலைத்தொடர் ஒன்றில் வயதான கழுகு ஒன்று வசித்து வந்தது. இத்தி மர பொந்தில் வசித்து வந்த அந்த கழுகிற்கு கண் பார்வை மங்கிவிட்டது. கால் நகங்களும் கூர் இழந்து விட்டன. அதனால் இரை தேட முடியாத அந்த கழுகிற்கு மற்ற பறவைகள் பரிதாபப்பட்டு தங்களுடைய இரைகள் சிலவற்றை அதற்கு கொடுத்து அந்தக் கழுகை காப்பாற்றி வந்தது.
ஒரு நாள் அந்த இடத்திற்கு பூனை ஒன்று வந்து சேர்ந்தது. அங்கிருக்கும் பறவை குஞ்சுகளை உண்ணும் நோக்கதோடு தான் அந்த பூனை அங்கே வந்திருந்தது. பூனையை கண்டதும் பறவை குஞ்சுகள் பயத்தில் அலறின. அதனால் அங்கிருந்த மூத்த கழுகு ஏன் அலறுகிறீர்கள் என்ன ஆபத்து வந்திருக்கிறது என்று கேட்டது.
நிலைமையை உணர்ந்த பூனை கழுகிடம் பவ்யமாக சென்று ஐயா வணக்கம் என்று முகமன் கூறியது.
கண் தெரியாத கழுகு நீ யார் என பூனையை பார்த்து கேட்டது.
நான் ஒரு பூனை என பதில் சொன்னது பூனை.
உடனே கழுகு பூனையை பார்த்து உடனே இங்கிருந்து போய் விடு இல்லாவிட்டால் உன் உயிர் போகும் என அச்சுறுத்தியது.
பூனை மீண்டும் மென்மையாக கழுகை பார்த்து நீங்கள் என் கதையை முதலில் கேளுங்கள். உங்களுக்கு அதன் பின்னும் என் மீது கோபம் இருந்தால் என்னை கொன்று விடுங்கள். சாதிப்பாகுபாடு காட்டி மற்ற பிராணிகளை கொள்வதும் சாதிக்கொரு நீதி என்கிற முறையில் பாகுபாடான உபசாரங்கள் செய்வதும் முறையல்ல.
அவனவன் கொண்டுள்ள ஒழுக்கங்களை கண்ட பின்பே தான் எது செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும் என்று பூனை கூறியது.
அதனால் கழுகு நீ எதற்காக இங்கே வந்தாய் அந்த காரணத்தை முதலில் கூறு என்று கூறியது.
பூனையும் நான் கங்கை நதிக்கரையில் வாழ்கிறேன். நாள் தோறும் கங்கையில் என் உடல் மூழ்க குளித்து சந்திராயணம் செய்கிறேன். நீ இந்த இடத்தில் வசிக்கும் புண்ணியவான் எனக் கேள்வியுற்றேன். அதனால் உன்னை பார்க்கவே வந்தேன். ஏனெனில் வயது முதிர்ந்த அறிவுடைய சான்றோர் எங்கிருந்தாலும் அவர்களை தேடி சென்று தரும உபதேசம் கேட்பது ஒருவனுடைய கடமை என தர்ம சாஸ்திரத்தில் கூறியிருக்கிறார்கள்.
உன்னிடம் வந்து உபதேசம் கேட்க வந்த என்னை கொல்தல் சரியா? எவனொருவன் வீட்டுக்கு வந்த விருந்தாளி மனம் வாடி முகம் களையிழந்து திரும்புகிறானோ அவன் அந்த வீட்டின் புண்ணியத்தை எடுத்துக் கொண்டு தன்னுடைய பாவத்தை அங்கே விட்டு செல்கிறான் என்று பொதுவாக சொல்வார்கள் என்று பூனை பேசியது.
இதனை கேட்ட கழுகு இறைச்சி உண்பதும் அதற்காக உயிர்களை கொள்வதும் உங்கள் குல வழக்கம் அல்லவா என்று பூனையிடம் கேட்டது.
இதனை கேட்ட பூனை சிவ சிவ நம்முடைய உடலை வளர்க்க பிற உயிரை கொலை செய்து உண்பதா ? நல்வழி கொண்ட அறம் சார்ந்த பல நூல்களை படித்து வளர்ந்த நான் அந்த பாதக செயலை அறவே விட்டு விட்டேன். நல்ல பழவகைகளை உண்டு வாழ்பவர்கள் இப்படி கொலை பாதகம் புரிவார்களா என்று தன்னை பற்றி தானே உயர்வாக கூறியது.
இறுதியில் கழுகு அதனை நம்பியது. தன்னுடன் இருக்க பூனைக்கு இடம் கொடுத்தது. பூனை கழுகுக்கு தெரியாமல் மெல்ல நடந்து சென்று இளம் பறவை குஞ்சுகளை கொன்று தின்று வாழ்ந்து வந்தது. இது கண் தெரியாத கழுகுக்கு தெரியாமல் போனது.
சில நாட்கள் போனதும் பறவை குஞ்சுகள் காணாமல் போவதை பெரிய பறவைகள் அறிந்து கொண்டன. இதை அறிந்த பூனை சிக்கினால் நாம் அவ்ளோதான் என்று அங்கிருந்து ஓடி விட்டது. தங்களது குஞ்சுகளை தேடிய பறவைகள் கழுகின் பொந்துக்கு சென்றும் பார்த்தன.
பூனை தான் தின்ற பறவை குஞ்சுகளின் எலும்புகளையும் சிறகுகளை கழுகின் பொந்திற்கு எதிரிலேயே போட்டு வைத்திருந்தது. அதனை கண்ட பெரிய பறவைகளுக்கு கோபம் வந்தது. தங்கள் பிள்ளைகளை கழுகுதான் கொன்று சாப்பிட்டு விட்டது என்று நினைத்து கழுகை கொத்தி கொலை செய்தன.
நீதி : குணம் தெரியாமல் யாருக்கும் இடம் கொடுக்க கூடாது.
Comments
Post a Comment