விடாமுயற்சி வெற்றிதரும்!
எல்லையில்லாத இசை ஆர்வம் ,
அந்த இளம் பெண்ணுக்கும் ,
அவர் சகோதரிக்கும்.
சகோதரிகள் இருவரும் இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து ,
பல கிராமபோன் ரிகார்டு ( இசைத்தட்டு ) கம்பெனிகளுக்கும் ஏறி இறங்கி , அலைந்து திரிந்து எவ்வளவோ கெஞ்சிக் கூட கேட்டுப் பார்த்தார்களாம்.
ஆனால் எந்த ஒரு இசைத்தட்டு கம்பெனியும் , இதற்கு இசைய மறுத்து விட்டார்களாம்.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம் :
‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் இந்தப் பாடல் மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் இந்த வீண்வேலை. விட்டு விட்டு வேறு வேலையைப் பாருங்கள்.’’
விடவில்லை அந்த சகோதரிகள்.
இசைத்தட்டு சுழல்வது போல் , இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து பலமுறை முயற்சித்தும்...
கீறல் விழுந்த இசைத்தட்டாக,
“முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்.
ஆனாலும் மனம் தளராத அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்.
முதலில் ‘ஆபேரி’ .
அடுத்து ‘சுப பந்துவராளி’.
அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’.
இறுதியாக ‘தோடி’.
இப்படி நான்கு ராகத்தில் பாடினார்கள் இந்தப் பாடலை !
சரி . போட்டுத்தான் பார்ப்போமே என்று ஒரு கம்பெனி 1970 - ல் வெறும் 500 ரிகார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம்.
அப்புறம் நடந்ததுதான் , எவருமே எதிர்பாராதது.
சாதாரணமாக வெளியிடப்பட்ட அந்த ரிக்கார்ட் பல சாதனை ரிக்கார்டுகளை எல்லாம் முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது.
சரி . இப்படி அந்தக் காலத்தில் படாத பாடுபட்டு பாடி இந்த இசைத்தட்டை வெளியிட்ட அந்த சகோதரிகள் யார் ?
சூலமங்கலம் சகோதரிகள் !
அந்தப் பாடல் -
கந்த சஷ்டி கவசம்.
"துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்;
நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலனருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை."
எவ்வளவு கஷ்டங்களையும் , போராட்டங்களையும் கடந்து வந்திருக்கிறது இந்த கந்த சஷ்டி கவசம் ?
அதற்குப் பின் கந்தசஷ்டி கவசத்தை பலரும் பலவிதமாக பாடியிருந்தாலும்,
சூலமங்கலம் சகோதரிகள் அளவுக்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை.
காரணம் ,
கடின உழைப்புக்கும் , விடாமுயற்சிக்கும் உள்ள ஈர்ப்பு சக்தி.
அதுதான் இந்த கந்த சஷ்டி கவசத்தின் வெற்றி.
அந்த சூலமங்கலம் சகோதரிகளின் வெற்றி.
"சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட"
இனி இந்தப் பாடலை கேட்கும்பொதெல்லாம் பக்தியும் வரும்.
சாதிக்க வேண்டும் எனும் சக்தியும் வரும்.
Comments
Post a Comment