இராமாயண கதைகள் - வாலியின் வதம்

#இராமர்_வாலியை_வதம்_செய்தது_ஏன்?

#வாலியின்_வாதங்கள்

வாலியை இராமர் கொன்றது தவறு என்று கருத்துரைப்போர், வாலியே இது குறித்து இராமரிடம் கேட்டுள்ளான் என்பதை இராமாயணத்தைப் படித்தால் அறிந்துகொள்ள முடியும். இராமரின் அம்பினால் பாதிக்கப்பட்ட வாலி கடுங்கோபம் கொண்டு பல்வேறு கேள்விகளை ஸ்ரீ இராமரிடம் முன் வைத்தான்.

அவையனைத்திற்கும் ஒன்றன் பின் ஒன்றாக இராமர் பதிலளித்தார். வாலியின் வாதங்கள் மற்றும் ஸ்ரீ இராமரின் பதில்களில் முக்கியமானவற்றை மட்டும் இங்கு காணலாம்.

#நான்_என்ன_தவறு_செய்தேன்?

மன்னர் என்பவர் வாய்மை, மன்னிக்கும் தன்மை, மனவுறுதி ஆகிய தன்மைகளுடன் தீயோர்களை தண்டிப்பவராக இருக்க வேண்டும். மன்னரின் நற்குணங்களை நீங்கள் (இராமர்) சீராகப் பெற்றுள்ளீர் என்று நினைத்தேன், குற்றமற்ற என்னை எதிர்கொள்ள மாட்டீர்கள் என்று நினைத்தேன்," என வாலி முறையிட்டான்.

நான் குற்றம் செய்தவன் அல்ல," என்ற வாலியின் வாதத்தினை ஸ்ரீ இராமர் பின்வருமாறு முறியடித்தார்:

காமத்தாலும் பேராசையாலும் நீ பாவகரமான செயல்களைச் செய்தாய். குறிப்பாக, உனது இளைய சகோதரனின் (சுக்ரீவனின்) மனைவியான ருமாவைக் கைப்பற்றி அவளை உனது மனைவியாக்கிக் கொண்டாய். இந்த ஒரு பாவச் செயல் போதும், உன்னை நான் தண்டிப்பதற்கு. மகள், மருமகள், சகோதரி, சகோதரனின் மனைவி ஆகியோருடன் உறவு வைப்பவர்களுக்கு மரணமே தகுந்த தண்டனை. ஓர் அரசன் பாவம் செய்தவனைக் கொல்லவில்லையெனில் அந்த பாவம் அரசனுக்கே வந்து சேரும்.

" உமக்கு என்ன அதிகாரம் உண்டு?

நான் தனிப்பட்ட முறையில் உமக்கு எந்தத் தீங்கும் இழைக்கவில்லை. உம்முடைய நாட்டிலோ நகரத்திலோ எந்த தீங்கும் செய்யவில்லை. அப்படியிருக்கும் பட்சத்தில் என்னைக் கொல்ல உமக்கு என்ன அதிகாரம் உண்டு?" என்ற வாலியின் கேள்விக்கு ஸ்ரீ இராமர் பின்வரும் பதிலை வழங்கினார்:

மலைகள், காடுகள், நதிகள் உட்பட இந்த முழு பூமியும் அதிலுள்ள அனைத்தும் இக்ஷ்வாகு வம்சத்தினரின் ஆட்சிக்கு உட்பட்டது. இக்ஷ்வாகு வம்ச அரசர்களுக்கு எல்லா மனிதர்களையும் விலங்குகளையும் தண்டிப்பதற்கான முழு அதிகாரம் உள்ளது. மன்னரான பரதரின் கட்டளைப்படி நீதியிலிருந்து விலகியோரை தண்டிக்கும் அதிகாரம் எனக்கு உண்டு."

#நான்_ஒரு_சாதாரண_வானரம்

காடுகளில் வாழும் மிருகங்களான நாங்கள் பழங்களையும் கிழங்குகளையும் உண்டு வாழ்பவர்கள்," என்று கூறிய வாலி, குரங்கான தன்னை சகோதரனின் மனைவியுடன் கொண்ட உறவிற்காக தண்டிக்கக் கூடாது என்று வாதிட்டான். குரங்குகளைக் கொல்வது எதற்கும் பயனற்றது, குரங்கின் தோலை உடுத்த முடியாது, குரங்கின் மயிரும் எலும்புகளும் புறக்கணிக்கப்படுகின்றன, குரங்கின் மாமிசத்தைக்கூட உண்ண முடியாது--அப்படியிருக்கும் பட்சத்தில் என்னை ஏன் கொல்ல வேண்டும்?" என்று வாலி மேலும் வினவினான்.

வாலி தன்னை வெறும் குரங்காக அடையாளம் கண்டு கொள்ள நினைத்தான். ஆனால் வாலி சாதாரண குரங்கா என்ற கேள்வியைக் கேட்போம். வேதக் கடமைகளான சந்தியாவந்தனம், சூர்யோபஸ்தானம் போன்றவற்றிற்காக வாலி விரதங்களை அனுஷ்டிப்பதுண்டு. இதை வைத்துப் பார்க்கும்போது வானரங்கள் சாதாரண மிருகங்களைக் காட்டிலும் உயர்ந்தவை என்பதை உணரலாம்.

இருப்பினும், வாலியின் வாதத்திற்கு ஸ்ரீ இராமர் பின்வருமாறு பதிலளித்தார்:

மக்கள் மிருகங்களைப் பிடிக்கும் போது சில நேரங்களில் நேரடியாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும், சில நேரங்களில் தந்திரமாகவும் செயல்படுவதுண்டு. மேலும், சத்திரியர்கள் வேட்டையாடும் போது கவனமின்றி இருக்கும் மிருகங்களை மறைவான இடத்திலிருந்து அம்புகளால் தாக்குவதுண்டு. நீ ஒரு வானரம் என்பதால், மறைந்திருந்து, முன்னறிவிப்பின்றி உன்னைத் தாக்கியதில் எந்தக் குற்றமும் இல்லை."

#மறைந்திருந்து_தாக்கியது_ஏன்?

வாலியை இராமர் ஏன் மறைந்திருந்து தாக்க வேண்டும் என்ற கேள்வியும் மேற்கூறிய விடையில் அடங்கிவிடுகிறது. மிருகங்களை வேட்டையாடும்போது பெரும்பாலும் மறைந்திருந்து தாக்குவதே பழக்கம் என்ற ஸ்ரீ இராமரின் பதிலே போதுமானது.

வேத விதிகளின்படி அக்கிரமக்காரர்கள் ஆறு வகையினர் (பார்க்க, பகவத் கீதை உண்மையுருவில், 1.36). இவர்களை உடனே கொல்லலாம், அதனால் பாவம் ஏதுமில்லை. வாலி சுக்ரீவனிடத்தில் செய்த அக்கிரமத்திற்காக அவனை தண்டிக்க வந்த காவல் அதிகாரியைப் போன்றவர் ஸ்ரீ இராமர். நான் வருகிறேன், உன்னை தயார்படுத்திக்கொள்" என்று அவர் அறிவிக்க வேண்டுமா என்ன? நிச்சயமாக அவசியம் இல்லை. எனவே, எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி வாலியை வதம் செய்ததில் என்ன தவறு?!

Comments