பகீரத ப்ரயத்தனம்! தமிழ் கதை.

பகீரதன் தீரன். பாவம்... அவனுக்குத குழந்தை பேறு வாய்க்கவில்லை.

குலம் தழைக்க,  மூதாதையர் சாபம் போக்கி நற்கதி அடைய வைக்க முடிவு தவத்தின் மூலம் ப்ரம்மனை அசைக்க முடிவு பண்ணி, நாட்டை மந்திரிகளின் வசம் ஒப்புவித்து, இமய மலைக்கு சென்று, நாற்புறமும் தீமூட்டி ஒற்றை காலில்  நின்று,  மாதம் ஒரு முறையே உணவருந்தி கடும்தவம் புரிகிறான். 

தவத்தின் உக்கிரத்தில் ப்ரஸன்னமான ப்ரஜாபதி ப்ரம்மன் அவன் தவத்தை மெச்சி, முன் தோன்றி "என்ன வரங்கள் வேண்டும்" என கேட்க,

"என் குலம் முடிந்து போகாமல் இருக்க எனக்கு சந்ததியையும், என் முன்னோர்கள் நற்கதி அடைய கங்கை புவிக்கு இறங்கியும் வர வேண்டும்" என பகீரதன் வேண்டுகிறான்.

படைக்கும் தெய்வம் அருளிய வாக்கு..

"முதலாவது சீக்கிரம் நடக்கும். 
இரண்டாவது.. கங்கை புவிக்கு இறங்கும் அசுர வேகத்தை தாக்கு பிடிக்க வல்லவர் பரமேஸ்வரன் ஒருவரே.  ஈசனை சரண் புகு." என கூறி மறைகிறார்.

பகீரதன் ப்ரமனின் அறிவுரை ஏற்று மீண்டும் வெயில், பனி, மழை பார்க்காமல், பகல் இரவென்று பார்க்காமல் அன்ன ஆகாரமின்றி  ஈசனை நோக்கி தவபுரிகிறான்.
(நம்மூர் வெயில்,மழை பனி மாதிரி இல்லை அங்கே. பின்னி பெடலெடுக்கும் இமயத்தில்)

பகீரதனின் பெருமுயற்சிக்கு மனமிரங்கி சாம்ப பரமேஸ்வரன் கங்கையை புவி சேர உதவிட சம்மதிக்கிறார்.
 
பிரம்மனும் தன் வாக்கை காப்பாற்ற கமண்டலம் சரித்து.. கங்கையை பூவுலகத்திற்கு பாய அருளுகிறார். 

பாய்ந்து வரும் கங்கையை தன் சிரசில் தாங்கி அவள் வேகம் தணித்து.. பூமியில் விழவைக்க நின்ற பரமசிவனை பார்த்த கங்கை..

தன் வேகத்தின் மீதே கர்வம் கொண்டு மகேசன் சிரம் பிளந்து தள்ளி கொண்டு பாய எண்ணுகிறாள். 

எல்லாம் அறிந்த சிவபெருமான் பாயந்து வந்த கங்கையை தன் சிரஸில் கட்டுப்படுத்த .. கர்வபங்கம் அடைந்த கங்கை ஈசனிடம் பணிகிறாள். 

இதனிடையே பிரவாகித்து வந்த கங்கை பூமி சேரவில்லையென உணர்ந்த பகீரதன் ஈசனிடம் மன்றாடுகிறான். 

பக்தர்களை மகிழவைக்கும் ஈசன் தன் பிந்து சிரஸிலிருந்து ஏழு நதிகளாக பிரித்து  கிழக்கு நோக்கி மூன்றும், மேற்கு நோக்கி மூன்றும் ஏழாவது பகீரதனை தொடரவும் செய்கிறார்.

கர்வம் தணிந்த கங்கை  துள்ளி குதித்து மகிழ்ச்சியாக பகீரதனை பின் தொடர்ந்த கங்கா மாதா ஜன்ஹூ மகரிஷியின் வேள்வியை கலைத்து விடுவதால் அவளை அப்படியே ஆசமனம் செய்து விடுகிறார் ரிஷி ஷ்ரேஷ்டர். 

கலங்கிய பகீரதன்,  தன் நோக்கத்தை எடுத்து சொல்லி  மகரிஷியை பணிந்ததால்,  அவர் மனமிரங்கி தன் வலது காதின் வழியாக கங்கையை வெளியே விடுகிறார்.

மனமகிழ்ச்சியுடன்  ரிஷியின் ஆசி பெற்று தன் மூதாதையர்களின் அஸ்தியை கங்கையில்  கரைத்து அவர்களை நற்கதி அடைய செய்கிறார் பகீரதன்.

இதனாலேயே..பெரு முயற்சியால்  செயற்கரிய செயல்களை செய்வதை பகீரத ப்ரயத்தனம் என்ன போற்றுகிறோம்.

சமகாலத்திலும் ஆறுகளை இணைக்க போராடி வருபவர்கள் செய்வது சுய நோக்கத்துக்காக அல்லாது லோக ஷேமத்திற்காக இருந்தால் ...அந்த பகீரதன் அவர்களுக்கு அருளட்டும்.
 
என் கங்கா மாதாவையும் எம்பெருமான் ஈசனையும், காக்கும் கடவுள் ஸ்ரீஹரியையும், பகீரதனையும் ப்ராத்தித்து கொள்ளகிறேன்.

கங்கைக்கு போய் ஸ்நானம் பண்ணினாலும், இல்லை இந்த புண்ணிய  கதையை பக்தியுடன் படித்தாலும், அன்று படிக்க சொல்லி கேட்டாலும் அவர்கள் சகல பாவங்கள் தீர்ந்து, அகம், புறம் சுத்தியடைவர். நற்சீலமும் எடுத்த காரியத்தை  முடிக்க தளரா முயற்சி செய்யும் சித்தம் அடைவார்கள் என்பது வால்மீகி பலச்ருதி.

Comments