சிவபெருமான் திருவிளையாடல் - 10 - திருவண்ணாமலை!

ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்ம தேவரும், காக்கும் கடவுளான பெருமாளும் தங்களுள் யார் சிறந்தவர் என்ற தர்க்கத்தில் ஈடுபட்டனர். தங்கள் தொழிலையும் மறந்து தர்க்கத்தைத் தொடர்ந்தனர். தர்க்கம் வலுத்தது. இருவருக்கும் உண்மையை உணர்த்த சிவபெருமான் அவர்கள் முன் தோன்றினார். தனது அடி அல்லது முடியைக் கண்டு யார் முதலில் திரும்புகிறார்களோ அவரே சிறந்தவர் என்று கூறினார். இருவரும் ஒப்புக்கொண்டனர். அடியைக் காண பெருமாள் கீழ் நோக்கி செல்ல, முடியைக் காண பிரம்ம தேவர் மேல் நோக்கி சென்றார். வெகு உயரம் சென்ற பிறகும் சிவபெருமானின் முடியைக் காண முடியவில்லை. அப்போது, சிவபெருமானின் சிரசில் இருந்து விழுந்த தாளம் பூ, கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது. தாளம் பூவைக் கண்ட பிரம்ம தேவர் அதையே ஐயனின் முடியைக் கண்டதாக கருத்தில் கொண்டு திரும்பினார். அதே சமயம் பெருமாளும் திரும்பினார். சிவபெருமானின் அடியைக் காணமுடியாமல் தான் திரும்பிவிட்டதாகக் கூறி தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்ம தேவரோ தான் முடியைக் கண்டு திரும்பியதாக பொய் உரைத்தார். அவருக்கு தாளம் பூ சாட்சி கூறியது. அனைத்தும் அறிந்த அண்ணல், செய்த தவறுக்கு தண்டனையாக பிரம்ம தேவருக்கும் தாளம் பூவுக்கும் சாபம் வழங்கினார். பிரம்ம தேவருக்கு பூவுலகில் திருக்கோயில் எதுவும் இருக்காது எனக் கூறினார். பொய் சாட்சி உரைத்த தாளம் பூவை சிவபூஜையிலிருந்து நீக்கினார்.

பிரம்ம தேவருக்கும் பெருமாளுக்கும் அக்னி சொரூபமாக சிவபெருமான் காட்சி கொடுத்த தலத்தில், மலையாக குளிர்ந்து இன்றளவும் அருள்பாலிக்கின்றார். "அடி முடி காணா அண்ணாமலையார்" என போற்றப்படுகிறார். சிவபெருமானிடம் முறையிடுவதற்கு முன், சிவ பூஜையில் ஈடுபட எண்ணிய பிரம்ம தேவர், தன் திருக்கரங்களால் சிவலிங்கத்தை நிறுவினார். அந்த லிங்கத் திருமேனியையே இன்று நாம் ஆதி அண்ணாமலையார் திருக்கோயிலின் மூலவராக தரிக்கிறோம்.         

தலபெருமைகள்:
1. பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் ஆதி திருக்கோயில் இதுவே. அருணை மலையின் வடபக்கம் அமைந்துள்ளது. 
2. சங்கப்புலவர் நக்கீரர், "இறையனார் அகப்பொருள்" என்ற நூலில் மூன்றாம் தமிழ் புணர்கூட்டு (சங்கம்) நடைபெற்ற காலத்திலேயே இத்தலம் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் தமிழ் புணர்கூட்டு தற்போதுள்ள மதுரையில் 1,800 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இந்த குறிப்பிலிருந்து, இக்கோயிலின் தொன்மையை நம்மால் உணரமுடியும். தற்போதுள்ள காலகட்டத்தில் நாம் சங்கம் என்று கூறியபோதும், பண்டைய காலத்தில், நம் முன்னோர்கள் "புணர்கூட்டு" என்றே குறிப்பிட்டுள்ளனர்.
3. அருணாச்சல புராணம் என்ற நூலில், சிவபெருமான், தான் இத்தலத்தில் நித்திய வாசம் செய்வதாகவும், சர்வ காலத்திலும் சித்தனாக இருப்பதாவும் கூறியுள்ளார். இதிலிருந்து, இத்தலத்தின் மகத்துவம் விளங்கும். 
4. அருணை மலைக்குள் செல்லும் பாதை இக்கோயிலினுள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி பகவான் ரமண மகரிஷியும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இப்பாதையானது ஞானிகளும் சித்தர்களும் அறிந்த ஒன்று. சாதாரண மானுடர் கண்களுக்கு புலப்படாது.  
5. சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பளவில் ஆகம முறைப்படி அமைந்துள்ள திருக்கோயில். பலவருடங்களாக முறையான சீரமைப்பு இல்லாமல் இருந்த திருக்கோயில். ஆன்மீக அன்பர்கள் பலரது உழைப்பால், புனருதானம் செய்யப்பட்டு, 2012 ஆண்டு குடமுழுக்கு கண்டுள்ளது.       
6. திருக்கோயிலுக்கு செல்லும் வழியில் மாணிக்கவாசகர் திருக்கோயில் உள்ளது.

ஆதி அண்ணாமலையார் திருக்கோயில், அடி அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு

மூலவர்: ஆதி அண்ணாமலையார்
பிற பெயர்கள்: அணி அண்ணாமலையார், ஆதி அருணாச்சலேஸ்வரர் 
அம்மன்: உண்ணாமுலையாள் 

சிறப்பு:
1. பிரம்மா தேவர் நிறுவிய லிங்கமே திருக்கோயிலின் மூலவர் ஆவார்.   
2. சைவ குறவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர், திருவெம்பாவை பாடிய திருத்தலம். 

ஊர்: அடி அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா 
புராணபெயர்: ஆதி அண்ணாமலை, அணி அண்ணாமலை
பெயர்க்காரணம்: 
1. அண்ணாமலையாரின் முதல் திருத்தலம் இதுவே. ஆதி திருத்தலம் இதுவே. அதனால், "ஆதி அண்ணாமலையார் திருக்கோயில்" என போற்றப்படுகிறது.
2. அருணாச்சல புராணம் என்ற நூலில், படைப்புக் கடவுளான பிரம்ம தேவர் தனது புதல்வனும், சனகாதி முனிவர்களுள் ஒருவருமான சனகரை நோக்கி, "வேறேங்கும் களைய முடியாத பாவங்கள் அணி அண்ணாமலையார் திருக்கோயிலில் களையப்படும். அத்தகைய சிறப்புமிக்க திருக்கோயில்" என்று குறிப்பிட்டுள்ளார். அணி என்ற சொல் அழகை குறிக்கின்றது.
காலப்பெருவெள்ளத்தில் ஆதி அண்ணாமலை அல்லது அணி அண்ணாமலை என்ற பெயர்கள் மருவி அடி அண்ணாமலை ஆனது. 

பயண வழிகாட்டல்:   
பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  

Comments