மந்தாரவதி கதை - விக்கிரமாதித்தன் கதைகள்!

இரண்டாம் பதுமை மதனாபிஷேகவல்லி சொன்ன வேதாளக் கதைகள்.

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்திலேறி வேதாளத்தை வீழ்த்தி, அதைத் தோளில் சுமந்து கொண்டு நடக்கத் தொடங்கினான். வேதாளம் பேசத் தொடங்கியது. 

"பராக்கிரமசாலியான விக்கிரமாதித்த இந்த இருண்ட பொழுதில் உனது நடைப் பயணம் களைப்பாகாமல் இருக்க கதை சொல்லுகிறேன். கேள்.”

அக்னிஸ்வாமி என்ற அந்தணன் பிரம்மஸ்தலம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். யமுனை ஆற்றங்கரையில் உள்ள அழகான ஊர் அது. வேதம் படித்தவன், ஊரில் நல்ல பெயர் எடுத்தவனாகையால் வாழ்க்கை சுகமாகப் போய்க்கொண்டிருந்தது. அவனுக்கு மிகுந்த அழகுடைய மந்தாரவதி என்ற மகள் இருந்தாள். பல பேர் அவளை மணக்க முன் வந்தும் அக்னிஸ்வாமி அவர்களுள் மூவரை மட்டும் தேர்ந்தெடுத்தான். அந்த மூன்று பிராமண இளைஞர்களும் வேத விற்பன்னர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தனர். மூவரில் யாரை மருமகனாகத் தேர்ந்தெடுப்பது என்று முடிவெடுக்க முடியவில்லை. மூவருமே தனித்தனியே மந்தாரவதியைப் பார்த்தார்கள். மூவருமே தனக்குத்தான் மந்தாரவதியைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள். அக்னிஸ்வாமியாலும் ஒரு முடிவுக்கு வரவியலவில்லை. இப்படியே நாள்கள் சென்றன. 

திடீரென்று மந்தாரவதிக்குக் காய்ச்சல் நோய் வந்தது. எவ்வளவோ வைத்தியர்கள் வந்து பார்த்தும் அவளது காய்ச்சல் குறையவில்லை. அக்னி ஸ்வாமியுடன் அந்த மூன்று இளைஞர்களும் அவள் குணமாவதற்காகக் காத்துக்கிடந்தனர். ஆனால் நாளாக நாளாக மந்தாரவதியின் காய்ச்சல்  குறையவில்லை. கண் திறக்காமலே உலகை விட்டு மறைந்தாள். அக்னிஸ்வாமியுடன் மூன்று இளைஞர்களும் அழுது தீர்த்தனர். 

மந்தாரவதியின் உடலை மயானத்தில் வைத்து எரித்தனர். முதல் இளைஞன் அங்கேயே அவளை எரித்த இடத்திலேயே குடிசை போட்டுத் தங்கினான். அவளது சாம்பலையே தனது படுக்கையாகக் கொண்டான். இரண்டாவது இளைஞன் அவளது அஸ்தியைக் கலசத்தில் எழுத்துக்கொண்டு கங்கையில் கரைத்து விடச் சென்றான். மூன்றாவது இளைஞன் காலியுடையணிந்து சன்னியாசி ஆனான். ஊர் ஊராகச் சென்று கிடைத்ததை உண்டு வாழ்ந்து வந்தான். 

அந்த சன்னியாசி இளைஞன் வெவ்வேறு ஊர்களைச் சுற்றிவரும்போது வஜ்ர லோகம் என்ற சிற்றுரை அடைந்தான். அந்த ஊரிலுள்ள அக்ரஹாரத்தில் ஒரு வீட்டின் முன் நின்று  “பவதி பிட்சாந் தேஹி” என்று யாசகம் கேட்டான். அந்த வீட்டிலிருந்து வந்த பிராமணப் பெண் உணவு சமைத்துக் கொண்டிருப்பதாகவும், சற்று நேரம் பொறுத்தால் வேண்டிய மட்டும் உண்டுவிட்டுச் செல்லலாம் என்றும் கூறினாள். இவனும் சரியென்று அந்த வீட்டின் திண்ணையிலேயே தங்கினான். 

வீட்டின் உள்ளேயிருந்து சமையல் வாசனை மூக்கைத் துளைத்தது. எட்டி உள்ளே பார்த்தான். அந்தப் பெண் சமைத்துக்கொண்டிருந்தாள். அருகில் அவளுடைய குழந்தை சத்தமாக அழுது கொண்டிருந்தது. அவள் குழந்தையைச் சமாதானப்படுத்தினாள். ஆனாலும் அது பிரவாதமாக அழுதவாறு இருந்தது. மறுபடி சமாதானப்படுத்த முயன்றாள். அக்குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. கோபம் தலைக்கேறிய அந்தப் பெண் குழந்தையைத் தூக்கு எரியும் அடுப்பினுள் செருகி விட்டாள்! குழந்தை எரிந்து சாம்பலானது! 

அதிர்ச்சியாக இருந்தது துறவிக்கு. என்ன ஒரு கொடூரம்! குழந்தையைக் கொன்றவள் வீட்டிலா எனக்கு உணவு ! மஹா பாவம்! எனக்கு இந்த வீட்டில் உணவு வேண்டா.

துறவி எழுந்தான், கிளம்பினான். அப்போது அந்தப் பெண்ணின் கணவன் வெளியில் வந்தான். 

"துறவியே, ஒரு நிமிஷம் பொறுங்கள். நீங்கள் எதனால்   கிளம்பிச் செல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்." என்றவாறே துறவியை உள்ளே அழைத்துக் கொண்டு போனான். துறவியை அமர வைத்து எதிரிலிருந்த மேடையிலிருந்து ஒரு பழைய புத்தகத்தை எடுத்துவைத்தான். வெளியில் சென்று ஒரு கைப்பிடி மண் எடுத்து வந்தான். எடுத்து வைத்த புத்தகத்தைத் திறந்து குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள மந்திரத்தைச் சொன்னான். பிறகு அந்த மண்ணை எடுத்துக் குழந்தையின் சாம்பலின் மீது வீசினான். அதனுள்ளிருந்து குழந்தை உயிருடன் வந்தது. துறவி அச்சர்யப்பட்டான்! இது மந்திரப் புத்தகமா !

வாய் விட்டுக் கேட்டான். 

"ஐயா, இது எப்படி சாத்தியம்?" 

" இது மந்திரப் புத்தகம்! ஒரு பிடி மண்ணை எடுத்து இந்தப் பக்கத்தில் உள்ள மந்திரத்தை உச்சரித்துச் சாம்பலின் மீது  வீசினால் இறந்து சாம்பலானவர் மீள்வர். " என்றான் அந்தப் பெண்ணின் கணவன். 

‘ஆ! எப்படியாவது நான் அந்தப் புத்தகத்தை எடுத்துக கொண்டு போக வேண்டும். இதை வைத்து மந்தாரவதியைப் பிழைக்கச் செய்ய வேண்டும்.’ 

ஒரு முடிவுக்கு வந்தவன் அன்றிரவு அங்கேயே தங்கினான். இரவில் அனைவரும் உறங்கிய பின் அந்தப் புத்தகத்தை களவாடிக் கொண்டு வந்தான். இரவு பகலாக நடந்து பிரம்மஸ்தலம் வந்து சேர்ந்தான். 

வேகமாக ஊரின் மயானத்துக்கு வந்தான். அதே நேரம் மந்தாரவதியின் அஸ்தியைக் கரைக்கச் சென்றவனும் அங்கு வந்து சேர்ந்தான். இருவரும் மந்தாரவதியை எரித்த இடத்தில் சாம்பல் மேட்டினில் குடிசையைப் போட்டுப் படுத்திருந்தவனைக் குடிசையில் நுழைந்து எழுப்பினான். 

"நண்பர்களே. என் மந்திர வலிமையால் மந்தாரவதியை உயிர்ப்பிக்கப் போகிறேன்." என்று சொன்னான் துறவியாக இருந்தவன். மந்தாரவதியின் சாம்பலின் மேல் மந்திரத்தை உச்சரித்து மண்ணை வீசினான். அதிரூபவதியாக மந்தாரவதி உயிர் பெற்று எழுந்தாள். அவளைப் பார்த்ததும் மறுபடி அவளை யார் திருமணம் செய்து கொள்வது என்று தகராறு ஏற்பட்டது. 

ஒவ்வொருவரும் தான்தான் மந்தாரவதியைத் திருமணம் செய்யத் தகுதியானவன் என்று வாக்குவாதம் செய்தனர்.  

விக்கிரமாதித்தனே, மூவரும் அடித்துக்கொள்கிறார்களே, உண்மையில் மந்தாரவதி யாரை மணந்து கொள்ள வேண்டும்? விடை தெரிந்தும் நீ அமைதி காத்தால் உன் தலை வெடித்துச் சிதறிவிடும்… 

வேதாளம் கதையை நிறுத்தியது.

"மிகவும் பாடுபட்டு மந்தாரவதியை மந்திரம் சொல்லி உயிர்ப்பித்தவன், உயிர் கொடுத்த தந்தைக்குச் சமமானவன். அவளை மணக்கும் தகுதி அவனுக்கு இல்லை. மந்தாரவதியின் அஸ்தியைக் கரைக்க கங்கைக் கரைக்குச் சென்றவன், மகனது கடமையைத்தான் ஆற்றியிருக்கிறான். அவனும் கணவன் ஆகும் தகுதியை இழந்தான். மந்தாரதியின் மேல் உள்ள காதலினால் அவளது சாம்பலின் மேல் படுத்துக் கிடந்தவன் தான் கணவனாகும் தகுதியுடையவன்.”

மெளனம் கலைத்து, சரியான விடை பகிர்ந்தான் விக்கிரமாதித்தன். வேதாளம் விடுபட்டுப் பறந்து சென்று முருங்கை மரம் சென்று தொங்கியது.!

Comments